போதையில் அலம்பல் - மும்பையில் இறக்கிவிடப்பட்ட விமான பயணி
மது போதையில் விமானிகளின் அறைக்குள் (காக்பிட்) நுழைய முயற்சித்த பயணி இறக்கிவிடப்பட்டுள்ளார். மும்பையிலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானத்தில் திங்களன்று இந்த சம்பவம் நடந்தது.
6இ-395 என்ற விமானம் மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் விமானிகளின் அறைக்குள் நுழைய முற்பட்டார். அவரை விசாரித்தபோது, தனது மொபைல் போனுக்கு சார்ஜ் போடுவதற்காக உள்ளே செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். பாதுகாப்பு விதிகளை மீறியதன் அடிப்படையில் அந்தப் பயணியை இறக்குவதற்கு தலைமை விமானி நடவடிக்கை எடுத்தார்.
விமானிகளின் அறைக்குள் நுழைவதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்பது வயதை தாண்டிய அந்தப் பயணி மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது. மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட் அவர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதேபோன்று திங்களன்று டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு கோஏர் நிறுவன விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர், விமானத்தின் பின்புற கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். முதல்முறை விமானத்தில் பயணித்த அவர், கழிப்பறை கதவு என்று நினைத்து பின்புற கதவை திறக்க முயற்சித்துள்ளார். இதைக் கண்ட இன்னொரு பயணி எச்சரித்ததையடுத்து விமான பணியாளர்கள், அந்தப் பயணியை தடுத்துள்ளனர். விமானம் இறங்கியதும் அவர் மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பலர் முதல்முறையாக விமானத்தில் பயணிப்பதால் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேருகிறது.