140 மில்லியன் டாலர் முறைகேடு - பாகிஸ்தான் மென்பொருள் நிறுவன தலைவர் கைது

இணையதளம் மூலம் போலி பல்கலைக்கழகப் பட்டங்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் பாகிஸ்தான் மென்பொருள் நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ஜூலை மாதத்திலிருந்து தலைமறைவாக இருந்த அவர், பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்தது ஆக்ஸாட் (Axact) என்ற மென்பொருள் நிறுவனம். சர்வதேச அளவில் போலி இணைய பல்கலைக்கழகங்களை நடத்தி, பட்டங்களை வழங்குவதாக பலரை ஏமாற்றி லட்சக்கணக்கான டாலரை மோசடி செய்துள்ளது. ஆண்டுதோறும் போலி பட்டங்களை விற்று வந்த இந்த நிறுவனத்தின் மோசடி 2015ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மூலம் வெளியானது.

"பணத்தை கொடுத்து உடனடியாக வாங்கும் இந்தச் சான்றிதழ் போலியானது என்பது தெரிந்த சிலருக்கு மட்டுமின்றி, உண்மையாக படித்து சான்றிதழ் பெற விரும்பிய பலரையும் ஏமாற்றுகிறார்கள்," என்று அப்போது செய்தி வெளியிடப்பட்டது.

மொத்தத்தில் 140 மில்லியன் டாலர் மோசடி செய்த இந்தக் குற்றத்திற்காக ஆக்ஸாட் நிறுவன தலைவர் சோயப் ஷேய்க்குக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பு வந்ததும் அவர் நீதிமன்றத்தில் சரணடையாமல் தலைமறைவாகி விட்டார். அவரை தற்போது புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நிறுவனத்தின் நிர்வாகி உமைர் ஹமித் (வயது 30) என்பவருக்கு போலி சான்றிதழ் வழங்கிய குற்றத்திற்காக அமெரிக்க நீதிமன்றம் ஒன்று 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>