காஞ்சிபுரத்தில் பிரபலமாகி வரும் ஃபயர் கட் !
காஞ்சிபுரத்தில், தலையில் நெருப்பு வைத்து முடி திருத்தம் செய்யும் முறைக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொதுவாக சலூன்களுக்கு சென்றால் மிலிட்டரி கட், போலீஸ் கட் என்று கேட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. புதிய பெயர்களில் ஸ்டைலான சிகையலங்காரங்கள் நிறையவே வந்துவிட்டன. அவற்றில் ஒன்று தான் தலையில் நெருப்பு பற்ற வைத்து முடி திருத்தம் செய்யும் புதிய முறையாகும்.
தமிழகத்தில் திருப்பூர் மாநகரை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் நகரில், ஃபயர் கட் பிரபலமாகி வருகிறது. செங்கழுநீர்ஓடை தெருவில் ஜாக் என்பவர் சலுன் கடை நடத்தி வருகிறார். ‘ஃபயர் கட்'என்ற பெயரில் அவர் செய்யும் சிகையலங்காரத்துக்குத் இளைஞர்கள் மத்தியில் தனி மவுசு ஏற்பட்டுள்ளது.
ரசாயனப் பொடியை தலைமுடியின் மீது தூவி, வாடிக்கையாளர் முடியில் நெருப்பை பற்ற வைக்கிறார் ஜாக். தலைமுடியில் நெருப்பு பற்றி எரியும்போதே, ஜாக் சிகையலங்காரம் செய்கிறார். 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, இளைஞர்கள் காத்திருந்து ஃபயர் கட் செய்கின்றனர். ஆனால், இந்தச் சிகையலங்காரத்தை தலை முடி அடர்த்தியாக உள்ளவர்களுக்கு மட்டுமே ஜாக் செய்கிறார்.