பாதகம் செய்பவரை மோதி மிதித்துவிடு பாப்பா- சிவகார்த்திகேயன்

சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள மோதி விளையாடு பாப்பா எனும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பிரச்சார குறும்படம் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

தெய்வத்திற்கு இணையாக குழந்தைகள் போற்றப்படும், இவ்வுலகில் அவர்களுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகளுக்கு பஞ்சமில்லை. அதுவும் இந்தியாவில் சொல்லவே வேண்டாம். நமது நாட்டில் 5 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபடுவதாகவும், 5 ஆண்டுகளில் இந்த குற்றங்கள் 150 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா சிறுமி, அயனாவரம் மாற்றுத்துதிறனாளி சிறுமி, சென்னை முகலிவாக்கம் சிறுமி என எண்ணற்ற சம்வங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். என்னதான் கடுமையான தண்டனை சட்டங்கள் இருந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிந்தபாடில்லை.

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால், குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப பெற்றோர்கள் குலை நடுங்குகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளை தற்காத்து கொள்ள பல தொண்டு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த சைசெல் அமைப்பு மற்றும் பீஸ் என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்கு மிக பிடித்த நடிகரான சிவகார்த்திகேயனை வைத்து 'மோதி விளையாடு பாப்பா' என்ற குறும்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டுள்ளார். இதன் நோக்கம் பாரதியாரின் ஓடி விளையாடு பாப்பா என்ற கவிதையில் இடம்பெற்றுள்ள

"பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்பயங்கொள்ள லாகாது பாப்பா!மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!"

என்பதை குழந்தைகள் மனதில் பதிய வைப்பதே. வீட்டில் மற்றும் பொது இடங்களில் நல்ல மற்றும் கெட்ட தொடுகை எப்படி உணர்ந்து கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் நமது குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் நல அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள் நம்புகின்றன.

More News >>