மருந்து வணிகர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிர் காக்கும் பொருளான மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. இதன் மூலம் தரம் குறைந்த மற்றும் போலி மருந்துகள் விற்பனை, போதை மருந்துகள் தாராளமாக புழக்கத்தில் வரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மருந்துகள் சட்ட விதிப்படி, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுப்படி மருந்துகள் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி அளித்தால், இந்த விதிகள் மீறப்படும் அபாயம் உள்ளது. மேலும், சிறு குறு மருந்தக கடையின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலையும் உருவாகும்.
எனவே, ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.
‘காலை தொடங்கிய இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம், மாலை 6 மணி வரை நீடிக்கும்’ என மருந்து வணிகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ‘ஆன்லைனில் வாங்கும் மருந்துகள் மாறுவதற்கும் காலாவதியான மருந்துகள் அனுப்பிவைக்கவும் வாய்ப்புகள் அதிகம்’ என்றும் ‘பெற்றோர்களுக்கு தெரியாமல் சிறுவர்கள் தடை செய்யப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கும் இது வழிவகுக்கும்’ என்றும் மருந்து வணிகர்கள் கூறுகின்றனர்.