ஐஐடி என்ஐடி ஐஐஐடியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க செப் 30 கடைசி நாள்!
ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப் படிப்பில் சேர ஜெஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்கான ஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.
இந்தத் தேர்வானது, முதன்மைத்தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு என இரு தேர்வுகளை உள்ளடக்கியது. என்ஐடி, ஐஐஐடி-யில் சேர ஜெஇஇ முதன்மைத்தேர்வு போதுமானது. ஐஐடி-யில் சேருவதற்கு அடுத்த கட்ட தேர்வான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அந்தவகையில் கடந்த ஆண்டு வரையில் ஜெஇஇ நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டு (2018௧9) முதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை அமைப்பு ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்த இருக்கிறது. முதல் தேர்வு வரும் ஜனவரி மாதத்திலும், 2-வது தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்படுகிறது.
2019ஆம் ஆண்டுக்கான ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி 6 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. தேர்வெழுத விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் www.nta.ac.in என்ற தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை பயன்படுத்தி செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட முழு தகவல்களும் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஏதேனும் ஒரு தேர்வை எழுதினால் போதும். எனினும் விருப்பப்பட்டால் இரு தேர்வுகளையும் எழுதலாம். அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அது ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதிக்கு கருத்தில்கொள்ளப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.