ஜெயலலிதா கால் துண்டிப்பா ?- வெளிச்சத்திற்கு வந்த உண்மை

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கால் துண்டிக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ சட்டப்பிரிவு மேலாளர் உட்பட 4 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். பின்னர் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதாவுக்கு கால்களில் இருந்து இருதயம் செல்லும் நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்று 3 முறை பரிசோதனை செய்ததாக அப்போலோ மருத்துவமனையின் கதிரியக்க மருத்துவர் மீரா வாக்குமூலம் அளித்தார்."

"இதன்மூலம் ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டு பொய்யாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் தவபழனி அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதாவிடம் பேசும்போது அவர் மருத்துவரிடம் தண்ணீர் கேட்டதாகவும், மாஸ்க் எடுக்க சொல்லி கூறியதாகவும் குறிப்பிட்டார்."

"மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தற்கான சிசிடிவி பதிவு ஏதும் இல்லை என அப்போலோ மருத்துவமனை சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் வாக்குமூலம் அளித்தார்."

"இதுவரை மொத்தம் 103 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. எங்கள் தரப்பு சார்பில் குறுக்கு விசாரணை நடத்த வேண்டிய மீதமுள்ள 17 பேரிடம் அடுத்த மாதம் ஆரம்பத்தில் விசாரணையை முடிக்க உள்ளோம்." என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்

More News >>