ஒக்கி புயலில் சிக்கி 400 தமிழக மீனவர்கள் மாயம்: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: ஒக்கி புயலில் சிக்கி அடித்து செல்லபட்டவர்களில் கடந்த 15ம் தேதி வரையில் மட்டும் 400 தமிழக மீனவர்களை காணவில்லை என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒக்கி புயலால், கன்னியாகுமரி, கேரளா கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும், கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலரும் காணாமல் போயினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாயமான மீனவர்களை மீட்டுத் தரும்படி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நடந்தன.மீனவர்களும், பொது மக்களும் பேருந்து மறியல், ரயில் மறியல்களில் ஈடுபட்டு போராட்டங்கள் நடத்தினர். இதனால், மீனவர்களை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒக்கி புயல் தாக்குதலில் சிக்கிய மீனவர்கள் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டது.அதில், “ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களில் கடந்த டிசம்பர் 15ம் தேதி வரை 845 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 453 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும், கேரளாவை சேர்ந்த 362 பேர் லட்சத்தீவு மற்றும் இதர பகுதிகளை சேர்ந்த 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஒக்கி புயலில் சிக்கி மீனவர்களில் 661 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் 400 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 261 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.
லட்சத்தீவை பொறுத்த வரை மாயமான மீனவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாநில அரசு கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் அதன் மூலம் மத்திய அரசு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டிருந்தது.