நிலத்தை அபகரிக்க முயற்சி- அமைச்சர் மீது மூதாட்டி வழக்கு

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்து தன் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மூதாட்டி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி அஞ்சனா. இவருக்கு சொந்தமான 32.87 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அபகரிக்க முயல்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, போலி ஆவணங்கள் மூலம் தன் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். இந்த நில விவகாரம் தொடர்பாக ஓசூர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன."

"ஆனால், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் அவர் உறவினர் பெயருக்கு நிலத்தின் பட்டாவை மாற்றியுள்ளார்" என மூதாட்டி குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலத்தை வேறு பெயரில் பட்டா பதிய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More News >>