பேஸ்புக்கில் புகைப்படம் போட்ட மகளை வெட்டிய தந்தை!
உத்தரப்பிரதேசம் மாநிலம் சாம்பல் பகுதியில் காதலனுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட மகளை தந்தை கோடாரியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாப்ரலா கிராமத்தைச் சேர்ந்த ஸ்வாதி என்ற மாணவி, அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அவர் தன்னுடன் படிக்கும் ஆண் மாணவனுடன் நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் மாணவி ஸ்வாதி அம்மாணவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்து அதை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்தைப் பார்த்த அந்த மாணவியின் உறவினர் ஒருவர் இதைப்பற்றி அந்த மாணவியின் தந்தையான ராஜ்குமார் கோஸ்வாமியிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் பழகி வரும் மாணவன் உயர் சாதியைச் சேர்ந்தவன் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்மாணவியின் தந்தை அவளைக் கோடாரியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அம்மாணவியின் இடது தோள்பட்டையில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஸ்வாதியை அருகிலிருந்த மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் இதுவரை அளிக்கப்படாததால், தலைமறைவாக உள்ள அந்த மாணவியின் தந்தையை பிடிக்கும் பணியை காவல்துறை தொடங்காமல் உள்ளது.