இந்தியர்களின் அமெரிக்க கனவு முடிவுக்கு வருகிறதா ?

அமெரிக்காவில் தங்கும் அனுமதி காலம் முடிந்த வெளிநாட்டவரை, நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான புதிய விதியை வரும் திங்கள்கிழமை முதல் அமெரிக்கா நடைமுறைப்படுத்த இருக்கிறது.

விசா நீட்டிப்பு மற்றும் குடியுரிமை அந்தஸ்து மாற்றத்திற்கு விண்ணப்பித்து, அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. அமெரிக்காவுக்கான விசா மற்றும் விசா நீட்டிப்பு வழங்கும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை (US Citizenship and Immigration Services - USCIS)இதை அறிவித்துள்ளது.

புதிய விதியின்படி, விசா நீட்டிப்பு மற்றும் குடியுரிமை அந்தஸ்து மாற்றம் வேண்டி விண்ணப்பித்தோரில், விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னிலையாகும் அறிவிக்கை (notices to appear - NTA) அனுப்பப்படும். அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தங்குவதற்கான ஆவணங்கள் இல்லாதோரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கையின் முதற்படி, இந்த முன்னிலையாகும் அறிவிக்கையாகும். இந்த அறிவிக்கை கிடைக்கப்பெறுவோர், குடிபுகல் நீதிபதியின் முன் முன்னிலையாக வேண்டும்.

குடியுரிமை அந்தஸ்தில் மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வேண்டி விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், போதுமான கால அவகாசத்தில் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை அறிவித்துள்ளது.

சட்டப்பூர்வமாக தங்கக்கூடிய காலம், பயண வசதி மற்றும் சட்டத்திற்குட்பட்ட வகையில் அமெரிக்காவை விட்டு புறப்படுதல் குறித்து விண்ணப்பங்களை சமர்ப்பித்தோருக்கு விவரங்கள் வழங்கப்படும் என்றும், குற்றப் பின்னணி, மோசடி மற்றும் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகியவற்றோடு தொடர்புடையவர்களை முதலில் கண்காணித்து வருவதாகவும் அத்துறை கூறியுள்ளது.

பணிபுரிதல் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான விண்ணப்பங்கள், கோரிக்கைகள் மேல் இந்தக் கொள்கை இப்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நீட்டிப்பு கோரி விண்ணப்பித்துள்ள ஹெச்-1பி விசாதாரர்கள் அநேகரின் மனுக்கள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களுள் பெரும்பான்மையோர் இந்தியராக இருக்கின்ற நிலையில், இந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் புதிய விதி அடிப்படையிலான நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமே தற்காலிக ஆறுதலாகும்.

More News >>