பெயரை மாற்றுக - ஸ்டார்பக்ஸ் போட்டி நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
'ஸ்டார்பக்ஸ்' போன்று பெயரை கொண்டிருந்த இந்திய நிறுவனத்தின் பெயரை மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரும் காஃபி கடை 'ஸ்டார்பக்ஸ்' (Starbucks). உலக புகழ் பெற்ற இந்நிறுவனம் 2012ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் கிளைகளை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 125 கிளைகள் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு உள்ளன.
இந்தியாவின் புதுடெல்லி நகரில் இயங்கி வரும் மற்றுமொரு காஃபி கடை, 'சர்தார்பக்ஸ்' (SardarBuksh). இக்கடைக்கு 25 கிளைகள் உள்ளன.
'சர்தார்பக்ஸ்' நிறுவனத்தின் பெயர் தங்கள் நிறுவனத்தின் பெயர் போல இருப்பதாக 'ஸ்டார்பக்ஸ்' நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்தது. தற்போது 'சர்தார்பக்ஸ்' நிறுவனம், பெயரை 'சர்தார்ஜி பாக்ஸ்' (Sardarji-Bakhsh) என்று இரண்டு மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ள ஒத்துக்கொண்டுள்ளது.
"எங்கள் நிறுவனத்தின் பெயரை உச்சரிக்கும்போது ஸ்டார்பக்ஸ் போல ஒலிப்பதால் நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு சாதமாக தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் பெயரை மாற்றிக்கொள்வதாக கூறியிருக்கிறோம். ஸ்டார்பக்ஸின் லோகோவில், பச்சை மற்றும் கறுப்பு நிற வட்டத்தினுள் கடல் கன்னி உருவம் இருக்கிறது. எங்கள் லோகோவில் தலைப்பாகை (டர்பன்) அணிந்த மனிதர் உள்ளார். ஆகவே,ஆனால் இலச்சினையை (லோகோ) மாற்ற வேண்டிய அவசியமில்லை" என்று சர்தார்பக்ஸின் உடன்நிறுவனர் சன்மீத் சிங் கர்லா கூறியுள்ளார்.
லூதியானாவில் உள்ள தெருக்கடை ஒன்றின் பெயர் "மிஸ்டர் சிங் பர்கர் கிங்" என்று இருந்ததற்காக அமெரிக்க நிறுவனமான 'பர்கர் கிங்' 2015ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்திய நிறுவனமான 'பர்கர் சிங்' இந்தியாவில் 20 கிளைகளை கொண்டுள்ளது. பிரிட்டனிலும் கிளைகளை திறக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.