ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலக்கெடு நீட்டிப்பா?
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், மேலும் காலநீட்டிப்பு கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அதற்கான அரசாணையும் 2017 செப்டம்பர் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
முதலாவதாக மூன்று மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில் மேலும் ஆறுமாதம், அதன் பின் நான்கு மாதம் என கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியது.
அதன் அடிப்படையில் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது வரை 103 பேரிடம் விசாரணையை நடத்தி முடித்திருக்கிறார். இதில் பல பேரிடம் மறுவிசாரணையும் நடைபெற்றுள்ளது.
மேலும், 50க்கும் மேற்பட்டோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையையும் செய்து முடித்திருக்கிறார்.
இந்நிலையில் இரண்டாவதாக வழங்கப்பட்ட நான்கு மாத கால நீட்டிப்பானது வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. குறிப்பிட்ட தேதிக்குள்ளாக விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துவிடலாம் என்ற அடிப்படையில் விசாரணையை ஆணையம் தீவிரமாக நடத்தி வந்தது.
இருப்பினும் இன்னும் பல பேரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும், உயர் அதிகாரிகள், மூத்த மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட பலரை விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் கால நீட்டிப்பு முடிவடையும் நிலையில் மேலும் மூன்று காலத்திற்கு அரசிடம் கால நீட்டிப்பு கேட்கலாம் என ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், அதற்கான கோரிக்கை கடிதத்தை விரைவில் ஆணையம் அரசுக்கு அனுப்ப உள்ளது.