உலக ஆறுகள் தினமும் அடையாறும்
செப்டம்பர் 30ம் தேதி உலக ஆறுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு சென்னை நகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான அடையாற்றை அழகுப்படுத்தும் பணியினை சேவை நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது.
"அடையாற்றினை இன்று காப்போம்" (START – Save the Adyar River Today) என்ற இந்த முயற்சியின் மூலம் அரசு, அரசு சாரா சேவை நிறுவனங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அடையாற்றினை அழகுப்படுத்துவது குறித்த ஒத்த கருத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதிகாலை ஆறு மணிக்கு அடையாற்றின் கரையில் பிரபல கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த செயல்பாடு மூன்று மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.
மிதிவண்டி தொடர் ஓட்டம் (சைக்ளோத்தான்), தொடர் ஓட்டம் (மாரத்தான்) உள்பட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும், இந்த ஆற்றினை அழகுப்படுத்த அரசு தொடங்கியுள்ள ஏழு ஆண்டு திட்டத்திற்கும் இந்த முயற்சி ஆதரவாக அமையும் என்றும் இதை நடத்தும் ரெஸிப்ரோசிட்டி பவுண்டேஷன் என்ற அரசு சாரா சேவை நிறுவனத்தை சார்ந்த மிருணாளினி சித்தார்த்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.