எம்.எல்.ஏ கருணாஸ் விடுதலை
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், செப்டம்பர் 16ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, கூட்டு சதி வன்முறையை தூண்டிவிடுதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு கடந்த 23ஆம் தேதி கருணாஸ் கைது செய்யப்பட்டார். முன்னதாக, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இது மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டது ஆகிய இரு வழக்குகளில் ஜாமின் கோரி கருணாஸ் தரப்பு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கருணாசுக்கு ஜாமின் வழங்கி, 30 நாட்களுக்கு தினமும் காலை 8.30 மணிக்கு நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
ஐபிஎல் போராட்ட வழக்கிற்காக, கருணாஸ் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, எம்.எல்.ஏ கருணாஸ், வேலூர் மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். பின்னர் பேசிய அவர், "தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தேன்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக தம்மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது" எனக் குற்றம்சாட்டினார்.