இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம், சுனாமி: 384 பேர் பலி
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று நிலநடுத்கத்தை தொடர்ந்து, சுனாமியும் தாக்கியதால், அதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் நேற்று 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாலூ என்ற நகரில் நேற்று மாலை மீண்டும் 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில், பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெற்றது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், கடலோரப் பகுதிகளில் சுனாமி தாக்கியது. 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலைகளைக் கண்டும் மக்கள் அச்சமடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. சுனாமி பேரலையில் சிக்கி பல வீடுகள் இடிந்து விழுந்தன. பலர் வெள்ளத்தில் அடித்துச் சென்றனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.