ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல கடமைப்பட்டுள்ளேன் - அதிமுக அமைச்சர் தடாலடி
திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நான் வாழ்த்து சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
தா.வாடிப்பட்டியில் உள்ள தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 63வது தேசிய அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நான் வாழ்த்து சொல்ல கடமைப்பட்டுள்ளேன். திமுகவை ஆர்.கே.நகர் மக்கள் டெபாசிட் இழக்க செய்துள்ளனர். இனி எதிர்காலமே திமுகவிற்கு கிடையாது என உறுதிப்பட செய்த ஆர்கே நகர் மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
எங்கள் அதிமுகவை பற்றி பேச குருமூர்த்திக்கு அருகதை இல்லை. எங்களை பற்றி பேச யார் அவருக்கு உரிமை கொடுத்தது? அவருக்கு நாவடக்கம் தேவை.
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி தற்காலிக வெற்றியே. நாங்கள் தான் தினகரனை உயர்ந்த இடத்திலே வைத்தோம். தினகரன் வெற்றி எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் போன தேர்தலில் ஓட்டு கேட்டார்கள் இப்பொழுது நிலை வேறாக இருந்ததால் மக்கள் தினகரன் மீது பரிதாபப்பட்டுவிட்டனர்” என்று தெரிவித்தார்.