பெங்களூருவுக்கு பெண் மேயர்: காங்கிரஸ் வென்றது !
பெங்களூரு மாநகராட்சி மேயராக காங்கிரஸை சேர்ந்த மாநகராட்சி பெண் உறுப்பினர் கங்காம்பிகே மல்லிகார்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேயர் தேர்தலை பாரதிய ஜனதா புறக்கணித்த நிலையில் அதன் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.
1 கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் பெங்களூரு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக அறியப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சியில் மொத்தம் 198 மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் 5 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள், 9 மாநிலங்களவை உறுப்பினர்கள், 28 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் மேலவை உறுப்பினர்கள் 19 பேர் என மொத்தம் 259 பேர் பெங்களூருவுக்கான மேயரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கலாம்.
பாஜகவுக்கு 100, காங்கிரஸூக்கு 75, மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு 15 மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளனர். எட்டு பேர் சுயேட்சைகள் ஆவர். காங்கிரஸூம் மத சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணியில் உள்ளன. பாரதீய ஜனதாவின் சார்பில் மேயர் வேட்பாளராக ஷோபா அஞ்சனப்பாவும், துணை மேயருக்கு பிரதிபா தன்ராஜூம் மனு தாக்கல் செய்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் மேயருக்கு ஜெயநகர் வார்டு உறுப்பினர் கங்காம்பிகே மல்லிகார்ஜூனும், துணை மேயருக்கு மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் காவேரிபுரா வார்டு உறுப்பினர் ரமிலா உமாசங்கரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.தங்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறிய சுயேச்சை உறுப்பினர்கள் சிலரை காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி கடத்தியதாக பாரதீய ஜனதா குற்றஞ்சாட்டியது. காங்கிரஸ் கூட்டணி அதை மறுத்த நிலையில் பாரதீய ஜனதா, மேயர் தேர்தலை புறக்கணித்தது.
காங்கிரஸ் வேட்பாளரான கங்காம்பிகே மல்லிகார்ஜூன் (வயது 40), 130 வாக்குகள் பெற்று பெங்களூருவின் 52வது மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை மேயராக மத சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ரமிலா உமாசங்கரும் தேர்வாகியுள்ளார் என மண்டல ஆணையர் சிவயோகி கலாஸாத் அறிவித்துள்ளார்.