பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று சந்திக்கிறார் டி.டி.வி.தினகரன்
சென்னை: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்தித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு 89,013 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார் டிடிவி தினகரன். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனும், திமுக வேட்பாளர் மருதுகணேஷூம் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். இதில், மதுசூதனனை தவிர மற்ற அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.
ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் நிறுத்தப்படட வேட்பாளர் மதுசூதனை விட 40 ஆயிரம் வாக்குகள் அதிகமாக டிடிவி தினகரன் பெற்றதால், இந்த நிகழ்வு தமிழக தேர்தல் வரலாற்றிலேயே புதிய தடம் பதித்தது. தேர்தலில் வெற்றிப்பெற்ற தினகரனுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், சசிகலாவை சந்திப்பதற்காக சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று காலை 11.25 மணிக்கு டிடிவி தினகரன் புறப்பட்டார்.
பின்னர், நேற்றிரவு ஓசுரில் தங்கிய தினகரன், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று மதியம் டிடிவி சந்திக்க இருக்கிறார். அப்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலாவிடம் ஆலோசிக்க இருப்பதாகவும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.