பிக்பாஸ் 2 டைட்டிலை வென்றார் ரித்விகா!
விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில், டைட்டில் வின்னராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 லட்சம் ரூபாயுடன் பிக்பாஸ் கோப்பை அவருக்கு வழங்கப்பட்டது. ரன்னர் அப்பாக ஐஸ்வர்யா தேர்வானார்.
விஜய் டிவியில் நேற்று பிக்பாஸ் ஷோ மூலம் அறிவிக்கப்படும் முன்னரே, வெள்ளியன்று, இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து விருதும் வழங்கப்பட்டு விட்டது. அப்போதே, ரித்விகாதான் டைட்டில் வின்னர் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இருந்தபோதும், கிராண்ட் ஃபினாலேவை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என நிகழ்ச்சிக்கு ஓவியா வரும் புரமோக்களை ஒளிபரப்பினர்.
பிரம்மாண்ட அரங்கில் நடத்தப்பட்ட நிறைவு நிகழ்ச்சியில், பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் பாடல்களுக்கு நடனமாடினர். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலிருந்து, பிக்பாஸ் ஷோவை கலாய்த்து ஒரு காமெடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வீட்டிற்குள் இருந்த மூன்று போட்டியாளர்களில் ஒருவரை நாமினேஷன் செய்யும் படலத்துக்கு, சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வை வீட்டிற்குள் கமல் அனுப்பி வைத்தார். ஆரவ், உள்ளே சென்று, ரித்விகாவை அழைத்து வருவது போன்று சீன் போட்டு, புரமோவுக்கு வழிவகுத்தார். கடைசியில், எதிர்பார்த்தபடியே விஜயலட்சுமியை எலிமினேட் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஓவியா மேடைக்கு வந்தார். ஓவியாதான், ஐஸ்வர்யா, ரித்விகா ஆகிய இருவரில் யார் டைட்டில் வின்னர் என்பதை அறிவிக்க உள்ளாரோ? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஓவியா கமலுக்கே ஒரு குறும்படம் போட்டுக் காட்டி சென்றார்.
இறுதியாக வெற்றியாளர் ரித்விகா என கமல் அறிவித்தார். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில், தமிழ் பொண்ணு ரித்விகா வெற்றி கோப்பையை தட்டிச் சென்றார். ரித்விகா வெற்றியை இந்திய அளவில் டுவிட்டரில் ஹாஸ்டேக் உருவாக்கி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். வாழ்த்துகள் ரித்விகா!