தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் சதி- உளவுத்துறை எச்சரிக்கை
கடலூர் மத்திய சிறையைத் தகர்த்து கைதியை கடத்தப் போவதாக, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சென்னையில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்சர்மீரான் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
அதையடுத்து பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதாக புகைப்படங்கள் வெளியான பிறகு அன்சர்மீரான் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிறையை தகர்த்து அன்சர் மீரானை கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறையினர் தமிழக சிறைத்துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று மாலை கடலூர் மத்திய சிறைக்கு வந்து சிறைக் காவலர்களுடன் அதிரடி சோதனை செய்தார். மேலும் கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு சிறையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய விடிய தீவிர சோதனை மேற்கொண்டால் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு நீடித்தது