அடுத்த பாகுபலியா? 8 நிமிடத்துக்கு 50 கோடி ரூபாய் செலவாம்!
டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் கிளைமேக்ஸில் வரும் 8 நிமிட போர்க்காட்சி 50 கோடி ரூபாய் செலவில் பாகுபலியின் போர்க் காட்சியை மிஞ்சும் வண்ணம் எடுக்கப்பட்டு வருகிறதாம்.
சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, சுதீப், தமன்னா என பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்.
விடுதலை போராட்ட வீரர் சைரா நரசிம்மா ரெட்டி வேடத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். வெள்ளைக் காரர்களை எதிர்த்து, ஆந்திராவில் போரிட்ட மாபெரும் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. அண்மையில், சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸரை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட போர்க்காட்சி ஜார்ஜியாவில் படமாக்கப் பட்டு வருகிறது. 5 வாரங்கள் அங்கு நடைபெறவுள்ள போர்க்காட்சியில், இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 150 கலைஞர்களை படக்குழு அழைத்துச் சென்றுள்ளது. இப்படத்தில் வரும் அந்த பலம் வாய்ந்த 8 நிமிட காட்சிக்காக 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாகுபலியை தொடர்ந்து மற்றொரு பிரம்மாண்டத்துக்கு டோலிவுட் ரெடியாகிவிட்டது.