2018ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு?
புற்றுநோய்க்கான சிகிச்சையில் புதிய அணுகுமுறையை உருவாக்கியதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் அலிசனுக்கும் James P Allison, ஜப்பானை சேர்ந்த தசுக்கு ஹோஞ்சோவுக்கும் Tasuku Honjo வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசுகள் துறைவாரியாக அறிவிக்கப்படத் தொடங்கியுள்ளன. முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நோய்எதிர்ப்பியல் துறை வல்லுநர்களான ஜேம்ஸ் அலிசனுக்கும் தசுக்கு ஹோஞ்சோவுக்கும் கூட்டாக மருத்துவத்துறை நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த உயிரியல் துறை பேராசிரியரான ஜேம்ஸ் அலிசன், புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழு இயக்குநர் ஆவார். இவரது கண்டுபிடிப்புகள் புற்றுநோய் சிகிச்சையில் புதிய முறைகளுக்கு வித்திட்டன.
ஜப்பானை சேர்ந்த மருத்துவத்துறை பேராசிரியரான தசுக்கு ஹோஞ்சோ, நோய்எதிர்ப்பியல் துறையில் செய்த கண்டுபிடிப்பும் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையை உருவாக்க வித்திட்டது. இந்த அடிப்படைகளிலேயே இருவருக்கும் கூட்டாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு முறையின் ஆற்றலை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சிகிச்சை முறைக்காக, இருவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.