எம்.எல்.ஏ. கருணாஸுக்கு நோட்டீஸ்...!?
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது குறித்து எம்.எல்.ஏ கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், செப்டம்பர் 16ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக வழக்குகள் பதிந்து, செப்டம்பர் 23ஆம் தேதி எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமின் அடிப்படையில் கருணாஸ், செப்டம்பர் 29ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாஸுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சபாநாயகர் தனபாலிடம் ஆலோசனை நடத்தினர். அவர்களை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சபாநாயகரை சந்தித்து ஆலோசனை செய்தார்.
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய குறித்து விளக்கம் அளிக்கக் கோரும் நோட்டீசுக்கு எம்.எல்.ஏ கருணாஸ் ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். பதிலளித்த பிறகே, சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு கருணாஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.