தமிழில் கையெழுத்திட்டு தமிழை ஏற்றிடுவோம்!
சகாயம் ஐஏஎஸ் வரிகளில், ஜி.வி பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ள ‘தமிழை ஏற்றிடுவோம்’ பாடல் தற்போது கானா.காமில் வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தமிழ் மீது தனது ஆர்வத்தை சமீப காலமாக அதிக அளவில் வெளிப்படுத்தி வருகிறார். சமூக அக்கறை மீதும் அவர் காட்டி வரும் அக்கறை அளவற்றது. சமீபத்தில், ஜி.வி. பிரகாஷ் என்பதற்கு பதிலாக, தமிழில், கோ.பெ. பிரகாஷ் குமார் என தமிழில் கையெழுத்திட்டு, தமிழ் கையெழுத்து புரட்சிக்கு வித்திட்டார். இவரது ட்விட்டர் பக்கத்தில், பலரும் தங்களது தமிழ் கையெழுத்துப் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சகாயம் ஐஏஎஸ் உடன் இணைந்து ஜி.வி. பிரகாஷ், தமிழ் கையெழுத்து குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடையே ஏற்படுத்தும் பாடலாக ‘தமிழை ஏற்றிடுவோம்’ என்ற பாடலை உருவாக்கியுள்ளனர். இப்பாடலை சகாயம் அவர்களே எழுதியுள்ளார். அந்த வரிகளுக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார்.
‘தமிழை ஏற்றிடுவோம்’ எனத் தொடங்கு அப்பாடல், தற்போது கானா.காமில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் கையெழுத்து போடவேண்டும் என்ற அவசியத்தையும், தமிழ் உணர்வை போற்றி புகழும் பாடலாகவும் இப்பாடல் உருவாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் இந்த பாடலுக்கு சிகப்பு கம்பள வரவேற்பை அளித்து வருகின்றனர்.