மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது- உயர்நீதிமன்றம் கருத்து
அரசியல் காரணங்களுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகனுக்கு சம்மன் அனுப்பியது.
இதனை ரத்து செய்யக் கோரியும், ரகுபதி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரியும் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டதாகவும், அந்த ஆணையத்திடம் இருந்த ஆவணங்கள் அனைத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திமுக தரப்பு வழக்கறிஞர், ஆணையத்திற்கு எதிரான மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி சுப்பிரமணியம் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறைப்படி வழக்கை வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
பின்னர் பேசிய நீதிபதி சுப்பிரமணியம், "அரசியல் காரணங்களுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. புதிய தலைமைச்செயலகம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டதிலும் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது."
"கட்டடத்தை கட்டியதில் ஏற்பட்ட முறைகேடு குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து ஒவ்வொரு தனிமனிதனும் கேள்வி எழுப்ப உரிமை உள்ளது என" நீதிபதி சுப்பிரமணியம் கருத்து கூறினார்.