ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தாகியுள்ளது.
டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் சுமார் 75% ஒப்பந்தங்களை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கப்பட்ட 55 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா குழுமம் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி-யும், நாகை மாவட்டம் கமலாபுரம் உள்ளிட்ட 2 இடங்களில் வேதாந்தா குழுமமும், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளன.
இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு 9 இடங்கள், ஓ.என்.ஜி.சி- 2 இடங்கள், பிபிஆர்எல், கெயில், ஹெச்ஓஇசி ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்த நிறுவனத்திற்கு 1794 சதுரஅடியில் இருந்து 2,574 சதுர அடி நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 731 சதுர அடி நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கோதாவரி படுகையிலும் கச்சா எண்ணெய் எடுக்க வேதாந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக விவசாயிகள் மத்தியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்புமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எதிர்ப்பு வராது என்றும் கடல் சார்ந்த பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.