மூடி மறைக்க முயற்சி - துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைச்சர் பேச்சு
தொழில்நுட்ப நிறுவன அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்க உயர் காவல்துறை அதிகாரிகள் சிலர் முயற்சிக்கின்றனர் என்று உத்தர பிரதேச சட்டத்துறை அமைச்சர் பிரிஜேஷ் பதக் கூறியுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை லக்னோவின் கோமதி நகர் விரிவு பகுதியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி விவேக் திவாரி (வயது 38) பலியானார். நள்ளிரவு நேரம் வாகன சோதனைக்காக நிற்கும்படி கூறியதாகவும், நிற்க மறுத்ததோடு தங்கள் மோட்டார் சைக்கிள் மீது பலமுறை காரினால் மோதினார் என்றும் காவலர் கூறியுள்ளார். காரை தங்கள் மீது ஏற்ற முயன்றதால், தற்காப்புக்காக சுட்டதாக உத்தர பிரதேச காவல்துறையை சேர்ந்த பிரசாந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
காரின் கண்ணாடியை துளைத்துக்கொண்டு சென்ற குண்டு, திவாரியின் இடப்பக்க தாடையில் நுழைந்து, தொண்டைக்கும் தலைக்கும் இடையில் சிக்கிக் கொண்டதால் அதிகமாக இரத்தம் வெளியேறியதால் திவாரி மரணமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது, முன்பு திவாரியோடு பணிபுரிந்த சானா கான் என்பவர் அவருடன் இருந்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்படி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எதிர் தரப்பில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
முதலாவதாக பதிவு செய்யப்பட்ட அறிக்கை சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்களை தப்பிக்கச் செய்யும் வகையில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதை மூடி மறைக்க சில உயர் அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறப்படுவது உண்மையாக இருக்கலாம் என தாம் கருதுவதாகவும் உத்தர பிரதேச சட்டத்துறை அமைச்சர் பிரிஜேஷ் பதக் கூறியுள்ளார்.
சுடப்பட்ட திவாரியின் மனைவி கல்பனா கொடுத்த தகவலின்பேரில் இரு காவலர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இரண்டாவதாக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுடப்பட்ட விவேக் திவாரியின் குடும்பத்தினரை திங்கள் அன்று யோகி ஆதித்யநாத் சந்தித்தார். 25 லட்ச ரூபாய் இழப்பீட்டுடன் குழந்தைகளின் கல்விக்காக 5 லட்சமும், திவாரியின் வயதான தாய்க்கு 5 லட்சமும் அவர் வழங்கினார். திவாரியின் குடும்பத்தினரின் கோரிக்கைகள் அனைத்தையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஜி. சுஜீத் பாண்டே தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.