தாயின் உடல் மீது அமர்ந்து இறுதிச் சடங்கு செய்த அகோரி!
திருச்சியில் உயிரிழந்த தாயின் சடலத்தில் ஏறி அமர்ந்து இறுதிச்சடங்கு செய்த அகோரியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்த கோவிலை மணிகண்டன் என்பவர் கவனித்து வருகிறார். இவர் ஏற்கனவே, காசிக்குச் சென்று அகோரியாக பயிற்சிப் பெற்றவர். காசிக்குச் சென்றபின் தற்போது வரை அவர் அகோரியாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் மணிகண்டனின் தாயார் மேரி என்பவர் வயது முதிர்வின் காரணமாக காலமானார். ஆனால் அவரது இறுதிசடங்கை வழக்கத்துக்கு மாறாக மணிகண்டன் நடத்தினார்.
மணிகண்டன் அகோரி என்பதால் அகோரிகளின் முறைப்படி இறுதிச்சடங்கை நடத்தியுள்ளார். அதன்படி தாயாரின் உடல்மீது ஏறி அமர்ந்து மேளதாளம் அடித்து சக அகோரிகள் சங்கு முழங்க இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் திருச்சியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.