13 வயது சிறுமியின் கருவை கலைக்க கோரி வழக்கு- உயர்நீதிமன்றம் உத்தரவு
13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க கோரிய வழக்கில், சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்க பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பெரியவடகிரி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவரின் 13 வயது மகளுக்கு, ஐந்து மாதங்களுக்கு முன் வேலு என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
தற்போது, 12 வார கருவை சுமந்துள்ள அச்சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டதால், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், குழந்தை திருமணம் பற்றி குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறுமியின் கணவர் வேலு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிறுமியின் உடல் நிலை மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளதால், கருவை கலைக்க கோரி, சிறுமியின் தாய் மல்லிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், சிறுமியின் உடல் நிலை குறித்து பரிசோதித்து, நாளை அறிக்கை தாக்கல் செய்ய, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளார்.