விமர்சனம்: காதல் தேனை கண்களுக்குள் ஊற்றிய 96 !

என்னப்பா! வாரத்திற்கு ஒருமுறை இப்படி வெரைட்டி நடிப்புடன் வெற்றிப் படங்களை கொடுத்தால், நாங்கள் என்ன செய்வது என விஜய்சேதுபதியை பார்த்து கேட்க தோணாதவர்கள், யாருமே இருக்க மாட்டார்கள். செக்கச்சிவந்த வானம் படத்தில், போலீசாக நடித்து மிரட்டிய விஜய்சேதுபதி, 96 படத்தில் பள்ளிப் பருவ காதல் மீண்டும் கிடைக்குமா? என ஏங்கி நம்மையும் ஏங்க வைக்கும் புகைப்படக் காரராக நடித்துள்ளார். இல்லை இல்லை வாழ்ந்துள்ளார்.

நாயகி, மோகினி என த்ரிஷா இனிமே நீங்க நடிக்க வேணாமே.. ப்ளீஸ்! என்றவர்களுக்கு நல்ல கதை கிடைத்தால், அதில் நான் தான் ராணி என செப்பல் ஷாட் கொடுத்துள்ளார் த்ரிஷா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை விட, இதில், வெறும் ஒரு குர்த்தி மற்றும் துப்பட்டாவுடன் சாதாரணமாக வந்து, நம் நெஞ்சில் காதலை ரசமாக ஊற்றி பிசைய வைத்து செல்கிறார் சூப்பர்.

இவங்க ரெண்டு பேருமே நடிப்பாங்கனு எல்லாருக்குமே தெரியும், இவங்களோட இளம் பருவமாக வருபவர்களோ, நம்மை 1996ஆம் ஆண்டிற்கே அழைத்துச் சென்று, ஆள் மனதில் இருக்கும் முதல் காதலை மீண்டும் ஒரு முறை வெளியே எடுத்து பார்க்க வைத்து விட்டனர்.

விஜய்சேதுபதியையும், த்ரிஷாவையும் சிஜி அல்லது உடல் எடையை குறைக்க வைத்து, கஷ்டப்படுத்து, காட்சியில் நமக்கு சளிப்பை ஏற்படுத்தாமல், இருந்ததற்கே இயக்குநர் பிரேம் குமாருக்கு கோடி நன்றிகள்!

இளம் வயது விஜய்சேதுபதியாக எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நல்ல தேர்வு, சிறப்பான நடிப்பு. நிச்சயம் தந்தையை விட பெரிய இடம் கிடைக்கும். ஆனால், அவருடைய நடிப்பை பீட் செய்வது மிகவும் கடினம் தம்பி. வாழ்த்துகள்!

இளம் வயது த்ரிஷாவாக அறிமுகமாகியுள்ள கெளரி, புதுப் பெண் மாதிரியே தெரியவில்லை. தனது சின்ன சின்ன ஆசை படிந்த முக பாவணை மற்றும் அரும்பு காதலை அள்ளித் தெளிக்கும் இடங்களில் க்ளாப்ஸ் அள்ளுகிறார்.

கதைக் கரு:

1996ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்படும் நட்பு முதல் காதலாக மாறுகிறது. ஆனால், வழக்கம் போல, ஒரு கட்டத்தில் அது பிரிகிறது. இருவரும் வேறு வேறு வாழ்க்கையில் பயணிக்கின்றனர். விஜய்சேதுபதி, புகைப்படக் கலைஞராக உள்ளார். இந்நிலையில், இவர்களின் நண்பர்களான தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் பள்ளி ரீ- யூனியனுக்கு தயார் செய்கின்றனர். அதில், மீண்டும் சந்திக்கும் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா இடையே நடைபெறும் உணர்ச்சி போராட்டம் தான் படத்தின் கதை.

படத்தின் பலம்:

படத்திற்கு அனைத்துமே பெரிய பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் காதலின் ஆழத்தை பார்ப்போர் மனதிலும் வேரூன்ற வைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காட்சியும், பிரேம் போட்டு வைக்கலாம் போல, அப்படி ஒரு நேர்த்தி, நடிப்பு விஜய்சேது, த்ரிஷா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி என அனைவரும் பாத்திரம் அடைந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விதம் என்று படத்தின் ப்ளஸ் கூடுகிறது.

பலவீனம்:

ஓவர் லவ்ஸ் மற்றும் த்ரிஷாவின் ஒரே மாதிரியான காஸ்ட்யூம்.

‘96’ படம் நிச்சயம் உங்களின் முதல் காதலை நினைவு படுத்தினால், கமெண்டில் பதிவு செய்யுங்கள்!

குறிப்பு:

’96’ திரைப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவது ரிலீசாகிறது. நேற்று பிரஸ் காட்சி போடப்பட்டதால், நல்ல படத்தை ப்ரமோட் செய்யும் நோக்கத்துடனே விமர்சனம் போடப்பட்டுள்ளது.

’96’ ரேட்டிங்: 3.75/5

More News >>