இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
பிரபல இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்தை தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அபிராமிபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அலுவலக மேலாளர் தொலைபேசியை எடுத்து பேசிய போது, மறுமுனையில் பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த நபர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அலுவலக மேலாளர் மணிரத்னத்திடம் பேசியுள்ளார். அவரது ஆலோசனைப்படி அபிராமிபுரம் காவல்நிலையத்தில் அலுவலக மேலாளர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து செல்போன் எண்ணை கொண்டு மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சைதாப்பேட்டையை சேர்ந்த பாலா, தனசேகர் ஆகிய இரண்டு பேர் இன்று அதிகாலை மணிரத்னம் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை பிடித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
"புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்ற அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதன் அடிப்படையில் மணிரத்னம் அலுவலகத்திற்கு வந்ததாகவும், தங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டலுக்கும் தொடர்பில்லை" எனவும் பிடிபட்ட இரண்டு நபர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.