கூவத்தூர் ரகசியம்- கருணாஸை கலாய்த்த ஓ.எஸ்.மணியன்
கூவத்தூர் சொகுசு விடுதியில் இட்லி, சட்னி சாப்பிட்டதற்கான ஆதாரம் மட்டும் தான் கருணாஸிடம் இருக்கும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலாயித்துள்ளார்.
நாகை மாவட்டம் வடவூரில் புதிததாக கட்டப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான சமுதாயக்கூடத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர், நடப்பாண்டு விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழக அரசு இதுவரை எந்த ஒரு அனுமதியையும் வழங்கவில்லை. மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பல திட்டங்களை மாநில அரசு ரத்து செய்துள்ளது" என்றார்.
"ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான இடங்கள் சேட்டிலைட் மூலம் மத்திய அரசு தேர்வு செய்தாலும், மாநில அரசு அனுமதி பெற்றால் மட்டுமே, அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்" என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், கூவத்தூர் சொகுசு விடுதியில் இட்லி, சட்னி, சாப்பாடு சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் மட்டுமே கருணாஸிடம் இருப்பதாக கலாயித்தார்.