ஹைட்ரோகார்பன் திட்டம்- அன்புமணி எச்சரிக்கை

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்க எந்த தியாகமும் செய்ய தயங்கமாட்டோம் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் உள்பட நாடு முழுவதும்  55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று (அக்டோபர் 1ஆம் தேதி ) கையெழுத்தானது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.     சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஆனந்தன் தலைமையில் நடக்கும் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.    பின்னர் பேசிய அன்புமணி,  "சாலை விபத்துகள், தற்கொலைகள் தமிழகத்தில் தான் அதிகம். இதற்கு முக்கிய காரணம் மது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் மதுவால் இறக்கின்றனர். மதுகடைகளை மூட வேண்டாம் என அரசு மேல்முறையீடு வரை செல்கிறது. பூரண மதுவிலக்கை செயல்படுத்தாவிட்டால், ஒருமித்த கட்சிகள் இணைந்து போராட்டத்தை முன் எடுப்போம்." என்றார்.    "தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம். இதற்காக எந்தவொரு தியாகமும் செய்ய தயங்க மாட்டோம்." என அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
More News >>