அனிதாவின் சகோதரருக்கு அரசு வேலை: நியமன ஆணையை வழங்கினார் எடப்பாடி
சென்னை: நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சத்திற்கான காசோலையும், அவரது சகோதரருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதற்கான நிகழ்ச்சி இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மோகன் பியாரே, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத், உடையார்பாளையம் வருவாய் கோட்ட அலுவலர் டினாகுமாரி, தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தின் பொது மேலாளர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறி இருப்பதாவது: அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதாவின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனிதாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று அவரது தந்தை சண்முகத்திடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும், அனிதாவின் சகோதரர் சதிஷ்குமாருக்கு சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் இளநிலை உதவியாளராக பணியமர்த்தம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையினை சதிஷ்குமாரிடம் வழங்கினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.