சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - வேளச்சேரி ரயில்கள் ரத்து

பேருந்து கட்டண உயர்வினை தொடர்ந்து கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்த புறநகர் ரயில்கள் அக்டோபர் முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்கென தென்னக ரயில்வே சிறப்பு புறநகர் ரயில்களை அறிமுகம் செய்தது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 9 மின் ரயில்களும், கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் 8 மின் ரயில்களும் ஜனவரி மாதம் 31ம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த ரயில்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திற்கு கூடுதல் சேவை

அக்டோபர் 1ம் தேதி முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் ரயில் ஒன்று காஞ்சிபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6:40 மணிக்கு புறப்படும் இந்த புறநகர் மின் ரயில் இரவு 8:30 மணிக்கு செங்கல்பட்டை வந்தடையும். அது இனி இரவு 8:45 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு 9:40 மணிக்கு காஞ்சிபுரத்தை அடையும் என்று கூறப்படுகிறது. மறு வழித்தடத்தில் காஞ்சிபுரத்திலிருந்து காலை 6:10 மணிக்கு புறப்பட்டு 6:55 மணிக்கு செங்கல்பட்டை அடையும். 15 நிமிடம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு காலை 8:55 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை அடையும் என்று கூறப்படுகிறது.

மின் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது புறநகரில் வசிப்போர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலையில் விரைவு ரயில் வழித்தடத்தில் நடைபெற்ற விபத்தினை காரணம் காட்டி, புறநகர் வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நிற்கும்படி இயக்கப்பட்டு வந்த மின் ரயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை மீண்டும் இயக்கப்படும் என்று பயணியர் எதிர்பார்த்து வந்த நிலையில், மேலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்துள்ள அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

More News >>