புதுச்சேரி அரசு விழாவில் ஆளுநர் கிரண்பேடி அதிமுக எம்.எல்.ஏ வாக்குவாதம்
புதுச்சேரியில் நடந்த அரசு விழாவின் போது, மேடையில் ஆளுநர் கிரண்பேடி, அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுவை மாநிலம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று கம்பன் கலையரங்கில் நடந்தது. ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். விழா மேடையில் அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், தனது தொகுதியின் குறைகளை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தார்.
மிக நீண்ட நேரம் உரையாற்றியதை கவனித்துக் கொண்டிருந்த ஆளுநர் கிரண்பேடி, ஒரு அதிகாரியை அழைத்து எம்.எல்.ஏவின் பேச்சை குறைத்து கொள்ளுமாறும், 10 நிமிடத்திற்கு மேல் பேச வேண்டும் எனவும் வலியுறுத்துமாறு கூறியுள்ளார். அதேபோல் அந்த அதிகாரி எம்.எல்.ஏவிடம் சொல்லியுள்ளார்.
இதைக்கண்டுக்காத எம்.எல்.ஏ அன்பழகன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் வேறொரு அதிகாரியை அழைத்த ஆளுநர் கிரண்பேடி, எம்.எல்.ஏ பேச்சை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இரு முறை சொல்லியும் எம்.எல்.ஏ அன்பழகன் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஆளுநர் கிரண்பேடி, வேகமாக மேடை ஏறிச் சென்று எம்.எல்.ஏ அன்பழகனிடம் பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள். அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அன்பழகன் நான் சொல்ல வேண்டியவற்றை சொல்லியாக வேண்டும், எனவே நிறுத்த முடியாது எனக்கூறி தொடர்ந்து பேசினார்.
ஆளுநருக்கு கோபம் மேலும் அதிகரித்ததால், அன்பழகன் பேசிய மைக்கை துண்டித்தார். அன்பழகனை பார்த்து நீங்கள் போகலாம் என்று ஆங்கிலத்தில் ஆவேசமாக கூறினார். ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ ஆளுநரை பார்த்து நீங்கள் போகலாம் என்று திரும்ப சொன்னார்.
இதன் காரணமாக மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்கள் அதிர்ச்சியாக பார்த்தனர். இதனை தொடர்ந்து, அன்பழகன் அமைச்சர் நமச்சிவாயத்திடம் சென்று என்னை எப்படி ஆளுநர் அவமதிக்கலாம், இதற்கு தான் என்னை விழாவுக்கு அழைத்தீர்களா? என்று கூறினார். பின்னர் அரசு விழாவை புறக்கணித்துவிட்டு அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.