முதலமைச்சராக நடிக்க மாட்டேன்! எடப்பாடியை சீண்டுகிறாரா விஜய்?
சர்கார் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில், கலந்து கொண்டு பேசியவர்கள், மாநாட்டில் பேசுவது போல விஜய்யின் அரசியல் பிரவேசத்தை மையமாக வைத்தே பேசினர். அதிலும், ராதா ரவி ஓபன் டாக்!
ரசிகர்களின் கையில் உள்ள மொபைல் மூலம் சர்கார் ஆடியோவை வெளியிட்டது டிஜிட்டலில் நடைபெற்ற ஒருவிரல் புரட்சி.
இறுதியாக, எதிர்பார்த்த விஜய்யின் பேச்சு, நிச்சயம் சரவெடி தான். தயங்கி தயங்கி பேசி வந்த விஜய், நேற்று நான் தலைவனாக தயாராகி விட்டேன் என்ற ரேஞ்சில், பன்ச் டயலாக்குகளுடன் தெளிவாகவும், கெத்தாகவும் பேசினார். சிறப்பு பயிற்சியா பாஸ்?
விஜய்யின் சரவெடி பேச்சு:
படத்தில் உழைத்த அத்தனை பேர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது பாணியில் நன்றியை தெரிவித்த விஜய், நடிகையர் திலகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மேடையிலேயே வாழ்த்து தெரிவித்தார். பின்னர், வர லஷ்மிய.. ஏன் வேண்டாம்னு சொல்லணும்னு, நடிகை வரலக்ஷ்மிக்கு ஒரு பன்ச் வசனம் பேசி, கைதட்டல்களை அள்ளினார். “ஆளப்போறான் தமிழன் தமிழர்களின் அடையாளம், ஒரு விரல் புரட்சி ஒட்டு மொத்த மக்களின் அடையாளம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு கிடைத்தது, சர்காருக்கே ஆஸ்கர் கிடைத்தது போல உள்ளது. மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, இதில் முருகதாஸ் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் என்றார். மேலும், விழா நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், இசையில், பாட முடியாத தனது ஆதங்கத்தை, சமாளிஃபிகேஷனுடன் வெளிப்படுத்தினார். கலைக்காக அள்ளி அள்ளி நிதி தருவதால், தான் அவருக்கு கலாநிதிமாறன் என்ற பெயர் வந்ததா, என தயாரிப்பாளரை குளிர்வித்தார். பின்னர் தான் சரவெடி.
தொகுப்பாளராக பணியாற்றிய நடிகர் பிரசன்னா, “படத்துல நீங்க முதலமைச்சரா? வரீங்கண்ணு பேசிக்கிறாங்க” என்றார். அதற்கு இல்லை என்பது போல் தலையாட்டி மறுத்துவிட்டார். அப்பவும் விடாத பிரசன்னா, “ஒருவேளை முதலமைச்சர் ஆனால்” என கேள்விக்கேட்க.. கற்பனையகத் தானே என முன்னெச்சரிக்கை போர்டு போட்டுக் கொண்டு, “முதலமைச்சர் ஆனால், முதலமைச்சராக செயல்படுவது போல் நடிக்க மாட்டேன்” என்றார். இந்த வார்த்தை மறைமுகமாக அல்ல, நேரடியாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தாக்குவது போல் தான் உள்ளது. முன்னதாக வெளியான ‘ஒரு விரல் புரட்சியே’ பாடலலிலும், தமிழக அரசை கழுவி கழுவி ஊற்றிய வரிகளால் நிரப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மெர்சலில், மோடி அரசுக்கு எதிராக ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்து பேசியதற்கே படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், இலவசமான புரமோஷனாகவும் அந்த எதிர்ப்புகள் மாறியது. இந்நிலையில், நேரடியாக தமிழக அரசை விமர்சிக்கும் சர்கார் ரிலீசாகுமா? இல்லை இவர்கள் செய்யும் எதிர்ப்பால், மீண்டும் பிளாக்பஸ்டர் ஆகுமா? என்பது தீபாவளி அன்று தான் தெரியும்..
அடுத்து, “எல்லாரும் தேர்தலுக்கு அப்புறம் தான் சர்கார் உருவாக்குவாங்க.. நாங்க சர்கார உருவாக்கிட்டு தேர்தல்ல நிக்கப் போறோம்” என்று விஜய் சொன்னதும் தேர்தலுக்கு விஜய் தயாராகி விட்டார் என ஆரவாரம் கிளம்பியது. சின்ன கேப் விட்ட விஜய், படத்தை சொன்னேன் என ரஜினி போல், பன்ச் வைத்து பேசி பின்னர், நழுவும் கலையை கற்றுக் கொண்டது நன்றாகவே புலப்பட்டது.
மேல்மட்டத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்வதால், கீழ்மட்டத்திலிருப்பவர்கள் ஊழல் செய்வார்கள். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. தலைவன் சரியாக இருந்தால், கட்சி சரியாக இருக்கும். வாழ்க்கையில் அடிப்பட்டு கீழே இருந்து ஒருவன் மேலே வருவான், அவன் தலைமையில் ஒரு சர்கார் நடக்கும்” என குட்டிக் கதை சொல்லி தனது சொற்பொழிவை முடித்து புதுப் பாதைக்கான பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.