ஜூனியர் என்டிஆரின் அரவிந்த சமேதா டிரெய்லர் ரிலீஸ்!
த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘அரவிந்த சமேதா’ டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக முகமூடி, மொகஞ்சதாரோ படங்களில் நடித்த பூஜா ஹெக்டெ நடித்துள்ளார்.
சூப்பர் ஹிட் மூவிக்களை கொடுத்து வரும் த்ரிவிக்ரம், வரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ‘அரவிந்த சமேதா’ படத்தை வெளியிட உள்ளார். இப்படத்தில் ஜூனியர் என்டிஆரின் அப்பாவாக சிரஞ்சீவி பிளாஷ்பேக் காட்சிகளில் வருகிறார்.
”தாத்தா எடுத்த கத்தி நல்ல காரியத்துக்கு பயன்பட்டது. அதே கத்தியை உங்க அப்பாவும் எடுத்தாரு, அது பாரம்பரியமானது. அதே கத்தியை நீ எடுக்கிறது ஒரு லட்சியத்துக்காக, ஆனால்? நாளை உன் பிள்ளை கத்தியை தூக்காம பார்த்துக்கப்பா” என பாட்டி ஜூனியருக்கு சொல்லும் டயலாக் படத்தின் கதையை விவரிக்கிறது.
நீலம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும், பூஜா ஹெக்டே, “பிரச்னைய சமாளிக்கிறவன் வீரன், பிரச்னையே வராம பார்த்துக்குறவன் சிறந்த மனுஷன்” என கூறும் வசனம் உத்வேகத்தை கூட்டுகிறது. டிரெய்லரின் முதல் பாதி, நாயகியை துரத்தும் நாயகனாக வலம் வரும் ஜூனியர், சற்று நேரத்தில், வில்லன்களை துவம்சம் செய்கிறார். கொலவெறி உன் டிஎன்ஏவிலே உள்ளது என உயரதிகாரி ஒருவர் ஜூனியருக்கு அட்வைஸ் செய்கிறார்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ராம் லக்ஷ்மன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர். பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு. நிச்சயம் வரும் தசரா பண்டிகை, ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு தீபாவளியாகவே மாறிவிடும்!