சிறையில் சசிகலா மவுன விரதம்: டிடிவி தினகரன் பேட்டி

பெங்களூரு: சிறையில் இருக்கும் சசிகலா ஜெயலலிதா நினைவு நாள் முதல் மவுன விரதத்தில் இருப்பதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற டிடிவி தினகரன், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க இன்று சென்றார்.

சசிகலாவை சந்தித்த பின்னர், வெளியில் வந்த டிடிவி தினகரன் சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா&டிடிவி தினகரனின் சந்திப்பு குறித்து அவர் கூறினார்.

இதுகுறித்து டிடிவி கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்தேன். வாங்கிவிட்டேன். எதிர்கால திட்டங்கள் குறித்து எடுத்து கூறினேன். அதற்கு அனுமதி அளித்தார். ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சிறையில் சசிகலா மவுனவிரதம் இருந்து வருகிறார்.

ஜெயலலிதா மரணத்தில் எந்தவித தவறும் நடக்கவில்லை. பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரம் இருப்பதால் நீடிக்கிறார்கள். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க பொதுச் செயலாளருக்கே அதிகாரம் இருக்கிறது.

எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம். அரசியலுக்கு யார் வந்தாலும் அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன். பாஜவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமாரின் சொந்த தொகுதியிலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன். அவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

More News >>