பெண் உட்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!

பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஆல்பர்ட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் வழங்கி வருகின்றனர்.

இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம், இலக்கியம், மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் புதுமையை நிகழ்த்தியதற்காகவும் சமூகத் தொண்டிற்காகவும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

முன்னதாக 2018ஆம் ஆண்டின் மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் கமிட்டி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் பி.ஸ்மித், பிரான்சிஸ் ஹெச்.அர்னால்ட், பிரிட்டனின் கிரிகோரி பி.வின்ட்டர் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இதில் அர்னால்ட் என்பவர் பெண் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 4 பெண்களுக்கு மட்டுமே வேதியியல் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் 5வதாக பிரான்சிஸ் ஹெச்.அர்னால்ட் இணைந்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வேதியியல் துறையில் பெண் நிபுணருக்கு நோபல் பரிசு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மனித குலத்திற்கு உதவும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.

More News >>