உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய்.

உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தலைவர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகாய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கோகாய் 1954ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பிறந்தவர். இந்திய பார் கவுன்சிலில் 1978ஆம் ஆண்டு சேர்ந்த அவர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, கௌஹாத்தி உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். 2019 நவம்பர் 17ஆம் தேதி கோகாய் பணி ஓய்வு பெறுகிறார்.

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வெளிப்படையாக குற்றம்சாட்டிய 4 நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>