நிலத்தடி நீர் கட்டுப்பாடு- அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

நிலத்தடி நீர் எடுக்க தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் விதித்த தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடம் தடை இல்லா சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு கடந்த 2014ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து 75 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. மத்திய நிலத்தடி நீர் ஆணையம் பிறப்பித்த விதிகளுக்கு முரணாக தமிழக அரசு செயல்பட முடியாது எனவும், இந்த அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுவுக்கு பதில் அளித்த தமிழக அரசு, இயற்கை வளமான நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசுக்கு தார்மீக உரிமை உள்ளதென்றும், வர்த்தக நோக்கத்திற்க்காக நிலத்தடி நீரை தனியார் நிறுவனங்கள் உறிஞ்சுவதை தடை செய்யவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது,

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த உரிய விதிகள் இல்லாத காரணத்தால், உலகிலேயே அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் நாடாக இந்தியா உள்ளது."

"நாட்டில் 80 % குடிநீர் தேவை நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது. 60 % மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 77 % நிலத்தடி நீர் ஏற்கனவே உறிஞ்சப்பட்டு விட்டதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன."

"2020ல் சென்னை, டில்லி உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. வருங்கால சமுதாயத்துக்கு தேவையான நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது" எனக் கூறிய நீதிபதி, தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டார்,

மேலும், உறிஞ்சப்படும் நிலத்தடி நீரை அளவீடு செய்ய மீட்டர் பொருத்தாத நிறுவனங்களுக்கு தடை இல்லா சான்று வழங்க கூடாது என்றும், அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும்,

வரையறுக்கபட்ட அளவை தாண்டி நிலத்தடி நீர் உறிஞ்சபடுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

More News >>