அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை கோரி வழக்கு
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத் தலைவரான அனில் அம்பானி, வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எரிக்சன் என்ற தொலைத் தொடர்பு நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்திற்கு அளித்த தொழில் நுட்பங்கள், கருவிகள், சேவைகளுக்காக சுமார் ரூ.1,600 கோடி ரூபாய் பெற வேண்டி இருந்தது.
இதற்கிடையே, சுமார் 45,000 கோடி கடன் சுமையினால் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், திவால் நிலைக்கு தள்ளப்பட்டு, செயலிழந்தது. உச்ச நீதிமன்ற ஆணையின் படி, ரூ. 1600 கோடிக்கு பதிலாக ரூ.550 கோடி பெற்றுக் கொள்ள எரிக்சன் நிறுவனம் சம்மதித்தது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதிக்குள், இந்த ரூ.550 கோடியை ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த தொகையை செலுத்த தவறியதால், ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி மற்றும் இரு உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரி, எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் அலைபேசி கோபுரங்கள், ஸ்பெக்ட்ரம், மற்றும் பைபர் ஆப்டிக், கேபிள்கள் ரூ. 25,000 கோடி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குவிற்க, அனில் அம்பானி ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் ஸ்பெக்ட்ரம் கட்டணம் ரூ.2,900 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு தராமல் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம், பாக்கி வைத்துள்ளது. இதற்கு ஈடாக வங்கி உத்தரவாதம் அளித்தால் தான், சொத்துகளை விற்க அனுமதிப்பதாக தொலைதொடர்பு அமைச்சரகம் அனில் அம்பானிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் கடன்களை திருப்பி செலுத்த, மேலும் 60 நாட்கள் அனில் அம்பானி நிறுவனம் கால அவகாசம் கேட்டுள்ளது.