நடுவானில் கலாட்டா- அவசரமாக தரையிறங்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்
போதை ஆசாமி செய்த கலாட்டாவினால் அமெரிக்காவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது.
திங்கள்கிழமை அமெரிக்காவின் போனிக்ஸ் நகரிலிருந்து பாஸ்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஒரு பயணி மது போதையோடு ஏறியுள்ளார். மேலும் மது கேட்ட அவர் இருக்கையில் அமராமல் எழுந்து நின்றுள்ளார்.
இருக்கையின் மேலே பயணியர் பைகளை வைக்கும் பகுதியில் தொங்கி கொண்டு 'உடற்பயிற்சி' (புல்-அப்) செய்ய முயன்றுள்ளார். விமான பணிப்பெண் அவரை உட்காருமாறு பலமுறை கேட்டுக்கொண்டும் அப்பயணி அமரவில்லை.
மாறாக, பணிப்பெண்ணை தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். அவரின் தொல்லை எல்லை மீறியதையடுத்து விமானம் வழியில் கான்சாஸ் நகரில் தரையிறக்கப்பட்டது. போதை பயணி அங்கு விமானத்தை விட்டு கீழே இறக்கப்பட்டார். அதன்பின் அவ்விமானம் பாஸ்டனுக்கு புறப்பட்டது.