மேகதாது அணை- கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடிதம்

மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 194 டிஎம்சி தண்ணீரில் இருந்து 14.75 டிஎம்சி நீரை கர்நாடக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அரைமனதுடன் செயல்படுத்தி வரும் கர்நாடக அரசு, அடுத்ததாக மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது.

சித்தராமைய்யா முதலமைச்சராக இருந்தபோது, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மேகதாது அணை காண திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. தற்போது, அங்கு புதிதாக ஆட்சி அமைத்துள்ள குமாரசாமி தலைமையிலான அரசு, மேகதாது அணை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் கர்நாடக அரசு மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு கர்நாடகா அரசு அனுப்பி வைத்தது. அறிக்கையை சரிபார்த்து விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா மாநிலத்திற்கான தண்ணீரை முறைப்படி பயன்படுத்திக்கொள்ள மேகதாது அணை திட்டம் ஏதுவாக இருக்கும். இத்திட்டத்தால் குடிநீர் மட்டுமல்லாது 400 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கப்படுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

More News >>