கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்

அரசின் எச்சரிக்கையை மீறி, தமிழகம் முழுவதும் 90 சதவீதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த மாதம் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில், அக்டோபர் 4ம் தேதி ஒருநாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆசிரியர்களின் போரா ட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதற்கட்டமாக, அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சம்பளம் பிடித்தம் செய்வது தொடர்பான உத்தரவை அனுப்பினார். அதில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு என்பது அரசுப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கையையும் மீறி, கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 90 சதவீதம் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்காக சென்னை மாநகரில் மட்டும் 50 % ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர்.

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில், நவம்பர் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அரசு ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிக்கு வந்துள்ளனர். ஊழியர்கள் வராமல் வெறிச்சோடி கிடந்த ஒரு சில அறைகள் பூட்டுப்போட்டு மூடப்பட்டன. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்து, எழிலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

More News >>