சிலை கடத்தல் வழக்கு விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்த மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க இயலாது என சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் கவிதா, அதிகாரப்பூர்வமில்லாமல் அலுவலகத்துக்கு வருவதாகவும், அவரை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வலியுறுத்தினார். இது சம்பந்தமாக வரும் 10ஆம் தேதி பதிலளிக்க அறநிலையத் துறை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

More News >>