நவம்பர் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
ஊதிய உயர்வு, பிடித்தம் செய்யப்பட்ட தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திமுக உள்பட 14 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் பெரியளவில் நடந்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில், சிலவற்றில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர் சங்கம் போராட்டத்தை வாபஸ் பெற்றது.
இந்நிலையில், ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடி நிலுவை தொகை திரும்ப வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக, போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதற்கான நோட்டீசை போக்குவரத்து மேலான் இயக்குனர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.