ரன்வீர் ஷாவுக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு லுக் அவுட் நோட்டீஸ்

தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமானநிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாயமான பழங்கால சிலைகள் கடத்தல் உள்பட மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்களை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு தோண்டி எடுத்து வருகிறது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தீனதயாளன் ஆகியோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவின், விசாரணையும் கடல் போல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதுவரை பல சிலைகள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒப்படைக்கப்பட்டன.

சமீபத்தில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா இல்லத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சோதனை செய்தது. அதில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன், கற்சிலைகள், கற்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் அனைத்தும் கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதேபோல், தஞ்சாவூரில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடம் மற்றும் மேல்மருவத்தூர் அருகிலுள்ள மோகல்வாடியில் உள்ள பண்ணை வீட்டிலும் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் இறுதியில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை அந்த குழு மீட்டது.

இந்த சிலைகளை முறைப்படி வாங்கியதாக ஏற்கனவே ரன்வீர் ஷா ஆதாரங்கள் சமர்ப்பித்து இருந்தாலும், அவை முறையாக இல்லாததால் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது ரன்வீர் ஷாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளது.

அனைத்து விமான நிலையங்களுக்கும் அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் மூலம், ரன்வீர் ஷா சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

More News >>